< Back
புதுச்சேரி
கல்வி நிறுவனங்களில் போதை எதிர்ப்பு குழு
புதுச்சேரி

கல்வி நிறுவனங்களில் போதை எதிர்ப்பு குழு

தினத்தந்தி
|
25 July 2023 11:08 PM IST

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு குழுவை உருவாக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா அறிவுறுத்தினார்.

புதுச்சேரி

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு குழுவை உருவாக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா அறிவுறுத்தினார்.

போதைப்பொருள்

புதுவையில் போதைபொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாதாரணமாக பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்த போதிலும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.

இந்தநிலையில் பள்ளி, கல்லூரி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் காவல்துறை தலைமையக கருத்தரங்க அறையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா. சைதன்யா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டுகள் சுவாதிசிங், வம்சீதரரெட்டி, ரவிக்குமார், ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாஜலபதி, ரமேஷ் மற்றும் அரசு தனியார் பள்ளி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

எதிர்ப்புக்குழு

கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா பேசியதாவது:-

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தற்போது போதை பழக்கம் பெருகிவிட்டது. குறிப்பாக கிராமப்புறங்களில் இது அதிகமாக உள்ளது. இதை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு குழு அமைக்கப்பட வேண்டும். இந்த குழுவில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், மாணவ, மாணவிகள் என 10 பேர் இடம்பெற வேண்டும்.

இந்த குழுவினர் மாணவ, மாணவிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களை அவர்களது நடவடிக்கைகளை பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.

கவுன்சிலிங்

அந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவேண்டும். மனநல ஆலோசகர்கள் மூலமும் இதை செய்யலாம். போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் போலீசாருக்கு 112 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு சீனியர் போலீஸ் கூறினார்.

மேலும் செய்திகள்