அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
|காரைக்காலில் பணி நிரந்தரம் செய்யக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்கால்
அகில இந்திய அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சம்மேளனம், ஜூலை 10-ந் தேதியன்று ஐ.சி.டி.எஸ். கோரிக்கை தினமாக அனுசரித்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் சம்பளம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கையின் அடிப்படையில் கவுரவ ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். கவுரவ ஊழியர்கள், உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால், கடற்கரை சாலை, மதகடி பாலம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன், பொதுசெயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன், புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர் சங்க அமைப்பு செயலாளர் லலிதா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் திரளான அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.