நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்; 2 பேர் படுகாயம்
|காரைக்கால் அருகே நடுரோட்டில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில 2 பேர் படுகாயம் அடைந்தனர். மதுபோதையில் ஓட்டிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோட்டுச்சேரி
அரியலூர் மாவட்டம் தானம்பேட்டை காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 60). விவசாயியான இவர், தனது உறவினர் திருவாரூர் மாவட்டம் திருக்கொட்டாரத்தைச் சேர்ந்த முத்துராமனின் வீட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது சேகரை தேள் கொட்டியது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த அவரை முத்துராமன் மீட்டு சிகிச்சைக்காக நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
நேற்று நள்ளிரவு அவரை ஆம்புலன்சில் ஏற்றி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் அவரது உறவினர் முத்துராமனும் இருந்தார். திருநள்ளாறை அடுத்த கீழாவூரைச் சேர்ந்த செந்தில் (48) என்பவர் ஆம்புலன்சை ஓட்டினார்.
2 பேர் படுகாயம்
நெடுங்காடு-மேலக்காசாக்குடி சாலையில் வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சேகர், அவரது உறவினர் முத்துராமன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து காரைக்கால் வடக்கு பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் மது போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.