ஆம்புலன்ஸ் தர அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுப்பு
|இறந்த முதியவரின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் தர அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்ததால் போலீசார் தவித்தனர்.
காரைக்கால்
இறந்த முதியவரின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் தர அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்ததால் போலீசார் தவித்தனர்.
இறந்து கிடந்த முதியவர்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள பழைய கட்டிடம் ஒன்றில், சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இறந்த முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்ல, அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் போலீசார் ஆம்புலன்ஸ் கேட்டனர். ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸ் தர மறுப்பு
தொடர்ந்து ஆம்புலன்ஸ் வேண்டாம், ஸ்டெச்சர் கொடுங்கள் நாங்கள் தள்ளியவாறு சென்று விடுகிறோம் என்று போலீசார் கெஞ்சியும், அதற்கும் ஆஸ்பத்திரி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக அவரது உடலை எடுக்க முடியாமல் போலீசார் தவித்து போய் நின்றனர்.
இதனை அறிந்த தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு அவரது உடலை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.