மருத்துவ படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு
|நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்குவது குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்குவது குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.
கவர்னர் ஆலோசனை
புதுவை கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கல்வித்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, கல்வித்துறை செயலாளர் ஜவகர், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, ஸ்மார்ட் சிட்டி திட்ட இணை தலைமை நிர்வாக அதிகாரி ருத்ரகவுடு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடை வழங்குதல், நீட் பயிற்சி உள்கட்டமைப்பு மேம்பாடு, பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-
30 மாணவர்கள் தேர்ச்சி
* சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் உள்ள சவால்களை சந்திக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
* அனைத்து பள்ளிகளையும் மேம்படுத்தி, ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.
* டிஜிட்டல், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணியை விரைவாக முடிக்கவேண்டும். மாணவர்களுக்கான மதிய உணவில் 2 நாட்களாவது சிறுதானிய உணவு வழங்கவேண்டும்.
* நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் வல்லுனர்களை கொண்டு சிறப்பாக நடத்தப்பட வேண்டும். இந்த முறை பயிற்சி மூலமாக 30 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.மாணவர்கள் இன்னும் அதிக மதிப்பெண்கள் பெரும் வகையில் பயிற்சி அளிக்கவேண்டும்.
மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு
* நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்கீடு செய்யவேண்டும்.
* மாதத்தில் ஒரு நாள் புத்தகப்பை இல்லா நாளாக கடைபிடிக்க வேண்டும். அந்த நாளில் கைவேலை, கலை, விளையாட்டு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.
* பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பதை ஆய்வு செய்து அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளிக்குவர ஊக்கப்படுத்த வேண்டும். பொதுத்தேர்வுகளில் முதல் இடம் பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து, மாணவர்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும்.
மேற்கண்டவாறு அவர் ஆலோசனை வழங்கினார்.
இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஆய்வு
புதுவை கோரிமேட்டில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது டாக்டர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளை சந்தித்தும் குறைகளை கேட்டார்.