'வெற்றி உணர்வை வெளிப்படுத்த அனைத்து மதத்தினரும் 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லலாம்' - தமிழிசை சவுந்தரராஜன்
|வெற்றி உணர்வை வெளிப்படுத்த அனைத்து மதத்தினரும் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை பயன்படுத்தலாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரி,
ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களை நோக்கி இந்திய ரசிகர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்ட விவகாரம் விமர்சனத்திற்குள்ளானது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"ரசிகர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கமிட்டதில் மதம் இருந்ததாக நான் பார்க்கவில்லை, வெற்றி உணர்வு இருந்ததாகவே பார்க்கிறேன். நம் நாடு வெற்றி பெற்றுவிட்டது என்ற உணர்வோடுதான் ரசிகர்கள் இதை சொல்லி இருக்கின்றனர்.
வெற்றி உணர்வை வெளிப்படுத்த அனைத்து மதத்தினரும் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கத்தை பயன்படுத்தலாம். இது மத உணர்வு சார்ந்தது இல்லை. மாறாக வெற்றி உணர்வையும், மன உணர்வையும் சார்ந்தது." இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.