பாலம் கட்டும் பணியால் விவசாயம் பாதிப்பு
|4 வழிச்சாலைக்காக ஆறு, வாய்க்கால்கள் குறுக்கே பாலம் கட்டும் பணியால் காரைக்காலில் விவசாயம் பாதித்துள்ளது.
கோட்டுச்சேரி
4 வழிச்சாலைக்காக ஆறு, வாய்க்கால்கள் குறுக்கே பாலம் கட்டும் பணியால் காரைக்காலில் விவசாயம் பாதித்துள்ளது.
4 வழிச்சாலை பணி
நாகை - விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் கண்டமங்கலம் அருகே எம்.என்.குப்பத்தில் இருந்து கடலூர் மாவட்டம் வழியாக சீர்காழி - சட்டநாதபுரத்தில் இருந்து ஆக்கூர், திருக்கடையூர், பொறையார் வழியாக காரைக்காலுக்கு வெளியே புறவழிச்சாலை கடந்து நாகப்பட்டினத்தை அடைகிறது.
இதில் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாலங்கள், மதகுகள் கட்டும் பணிகள் பெரும்பாலும் வயல்வெளிகள், ஆறுகள், வாய்க்கால்களின் குறுக்கே நடக்கிறது.
ஆறு, வாய்க்காலில் அடைப்பு
இந்தநிலையில் விவசாய பாசனத்துக்காக காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடையான காரைக்காலின் முகப்பு பகுதியான அம்பகரத்தூர், நெடுங்காடு பகுதியில் உள்ள ஆறுகளில் தேங்கியுள்ளது. ஆறுகள், வாய்க்காலின் குறுக்கே 4 வழிச்சாலைக்காக பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், மணல் கொட்டி தடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரும்பு கம்பிகள், கான்கிரீட் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் தடைபட்டுள்ளது. நடவு செய்த வயல்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
எனவே சாலை பணியை விரைந்து முடித்து ஆறுகள், வாய்க்கால்கள் வழியாக தடையின்றி தண்ணீர் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.