< Back
புதுச்சேரி
மதிய உணவுடன் மீண்டும் முட்டை வினியோகம்
புதுச்சேரி

மதிய உணவுடன் மீண்டும் முட்டை வினியோகம்

தினத்தந்தி
|
17 July 2023 10:18 PM IST

புதுவை அரசுப்பள்ளிகளில் மதிய உணவுடன் மீண்டும் முட்டை வினியோகம் தொடங்கியுள்ளது.

புதுச்சேரி

புதுவை அரசுப்பள்ளிகளில் மதிய உணவுடன் மீண்டும் முட்டை வினியோகம் தொடங்கியுள்ளது.

மதிய உணவுடன் முட்டை

புதுவையில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சுமார் 52 ஆயிரம் பேருக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. அதாவது வாரத்துக்கு 3 நாட்கள் இந்த முட்டை பள்ளிகள் தோறும் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த மாதம் 14-ந்தேதி திறக்கப்பட்டன. அதுமுதல் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முட்டைகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

மீண்டும் வினியோகம்

மதிய உணவுடன் முட்டை வழங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து இன்று முதல் முட்டை வினியோகம் மீண்டும் தொடங்கியது. குருசுக்குப்பம், ஏம்பலம், கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் உள்ள மத்திய சமையல் கூடங்களில் முட்டை அவிக்கப்பட்டு பள்ளிகள் தோறும் வினியோகிக்கப்பட்டது.

இந்த முட்டைகள் சரிவர அவிக்கப்பட்டுள்ளதா? என்பதை பள்ளிக்கல்வி துணை இயக்குனர் கொஞ்சுமொழி குமரன் ஆய்வு செய்து பள்ளிகளுக்கு அனுப்பிவைத்தார். வாரந்தோறும் 1 லட்சத்து 56 ஆயிரம் முட்டைகள் மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

முத்திரை

இந்த முட்டை அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வினியோகிக்கப்படுவது என்பதை குறிக்கும் வகையில் MDM-PDY (மிட் டே மீல்ஸ்-புதுச்சேரி) என்று முத்திரையிடப்பட்டு வழங்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் வெளியில் விற்கப்பட்டால் எளிதாக கண்டறியும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்