ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை
|புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி
புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வியாபாரிகள் எதிர்ப்பு
புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ரூ.60 கோடி மதிப்பில் நேரு வீதியில் உள்ள பெரிய மார்க்கெட் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக அங்குள்ள வியாபாரிகளை ரோடியர் மில் வளாகத்துக்கு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் புதிய பஸ்நிலையம் ரூ.30 கோடியில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் மீன் மார்க்கெட் அருகில் புறநகர் பஸ்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்த பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், மாவட்ட கலெக்டர் வல்லவன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, பெரிய மார்க்கெட், புதிய பஸ்நிலையம் மற்றும் புறநகர் பஸ்நிலையத்தின் கட்டிட வரைபடத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் காட்டி விளக்கி கூறினர்.
மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தல்
அப்போது பெரிய மார்க்கெட்டில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், பழக்கடைகள், இறைச்சி கடைகள், மீன்மார்க்கெட் மற்றும் பல்வேறு கடைகள் அமைய உள்ள இடத்தையும், அங்கு மேற்கொள்ளப்பட உள்ள லிப்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறை, உணவுக்கூடங்கள், பொருட்கள் வைக்கும் அறை, தாய்ப்பால் கொடுக்கும் இடம், பஸ்கள் தொடர்பான விசாரணை அறை, தகவல் மையம், டிக்கெட் முன்பதிவு அலுவலகம், டிரைவர்கள் தங்கும் இடம் உள்ளிட்டவைகள் அமைய உள்ள இடத்தையும் விளக்கி கூறினர்.
அதனை கேட்டறிந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி அதில் சில மாற்றங்கள் செய்யும் படி அறிவுறுத்தினார். மேலும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.