7.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
|புதுவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
7.5 சதவீத இடஒதுக்கீடு
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் புதுச்சேரியிலும் வழங்கவேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் புதுவை சட்டசபை அருகே (மிஷன் வீதி மாதாகோவில் எதிரே) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இணை செயலார் கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், செயலாளர் அன்பழக உடையார், துணை செயலாளர்கள் எம்.ஏ.கே.கருணாநிதி, கணேசன், குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
அரசியல் காழ்ப்புணர்ச்சி
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த இட ஒதுக்கீட்டினால் ஆயிரக் கணக்கான மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர். அத்தகைய இடஒதுக்கீட்டினை புதுவையிலும் அமல்படுத்த காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் கேட்டபோது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதை செய்யவில்லை.
புதுவையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி வந்தபோது கவர்னர், முதல்-அமைச்சர், கல்வி அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். இந்த ஆண்டு சுமார் 389 இடங்கள் அரசு இடங்களாக கிடைத்துள்ளது. இதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் சுமார் 30 அரசுப்பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
மக்கள் பாடம் புகட்டுவார்கள்
தனியார் பள்ளிகளுக்கு சாதகமான நிலைப்பாட்டில் அரசு இருப்பதால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீட்டை அரசு வழங்கவில்லை. புதுவையில் தி.மு.க.வுக்கும் இந்த பிரச்சினையில் அக்கறையில்லை. அவ்வப்போது கவர்னரை பற்றி விமர்சனம் செய்தால் போதும் என்ற நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது. வருகிற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். தமிழகம், புதுச்சேரியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெறும்.
இந்த அரசை நம்பி நாங்கள் இல்லை. அ.தி.மு.க.வால் உருவாக்கப்பட்டதுதான் இந்த அரசு.எல்லா பிரச்சினைகளிலும் தலையிடும் கவர்னர் இந்த இடஒதுக்கீடு விஷயத்தில் தலையிடவில்லை. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் பிரதமரின் நிலைப்பாட்டிற்கு எதிராக புதுவை அரசு உள்ளது.
அரசின் தவறுகள்
தமிழகத்தில் அரசு செய்யும் தவறுகள் மக்களுக்கு தெரியும் முன்பு கவர்னர் எதையாவது பேசுகிறார். இதனால் அனைத்துகட்சியினரும் ஒன்றுகூடி அவருக்கு எதிராக பேசுகின்றனர். இதனால் அரசின் தவறுகள் வெளியில் தெரிவதில்லை.
இவ்வாறு அன்பழகன் பேசினார்.