ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
|எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாக விமர்சித்த ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து புதுவையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி
எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாக விமர்சித்த ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து புதுவையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாக விமர்சித்த ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து புதுவையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காமராஜர் சாலை- லெனின் வீதி சந்திப்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் அன்பானந்தம், ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது அன்பழகன் பேசியதாவது:-
சி.பி.ஐ. விசாரணை
கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது தி.மு.க.வினர் திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருகின்றனர். 4½ ஆண்டுகள் துணை முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க அ.தி.மு.க. நிர்வாகிகளை களங்கப்படுத்தி பேசி வருகிறார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்தார். அ.தி.மு.க. ஆட்சியில் கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பிடிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
சூழ்ச்சிகளை முறியடித்து...
அ.தி.மு.க.வை அழித்து அதன் செயல்பாட்டை முடக்க நினைக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் அத்தனை சூழ்ச்சிகளையும் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தின் மூலம் முறியடித்து கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் காப்பாற்றியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு, இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்ட பிறகும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வின் கொடியையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்தி வருகின்றனர்.
மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் செயலை எடப்பாடி பழனிசாமி முறியடிப்பார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவரது தலைமையிலான கூட்டணி தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். புதுவையில் அ.தி.மு.க. போட்டியிட வலியுறுத்துவோம்.
இவ்வாறு அன்பழகன் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழக உடையார், துணை செயலாளர் எம்.ஏ.கே.கருணாநிதி, மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், வழக்கறிஞர் அணி குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.