கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை
|புதுவை கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி சஞ்சீவ்குமார் பல்யானிடம், அமைச்சர் லட்சுமி நாராயணன் வலியுறுத்தினார்.
புதுச்சேரி
புதுவை கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி சஞ்சீவ்குமார் பல்யானிடம், அமைச்சர் லட்சுமி நாராயணன் வலியுறுத்தினார்.
உயர்மட்ட குழு கூட்டம்
புதுவை மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உயர்மட்ட குழு கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். இதில் துறை செயலாளர் நெடுஞ்செழியன், இணை இயக்குனர் தெய்வசிகாமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுவை அரசு சார்பில் மீனவர்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
புதுவை மாநிலத்தில் எந்திரம் பொருத்திய மற்றும் எந்திரம் பொருத்தாத படகுகள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றுடன் ஆழ் கடல் மீன்பிடித்தலை ஊக்குவிக்க தேவையான படகுகள், உபகரணங்கள் வாங்க மத்திய அரசிடம் நிதி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து மீனவ கிராமங்களிலும் மத்திய, மாநில அரசு மூலம் மீனவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கி மீன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மகாபலிபுரத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் மீனவர்களுக்கான மாநாட்டில் அமைச்சர் லட்சுமி நாராயணன் வலியுறுத்த முடிவு செய்துள்ளார்.
கடல் அரிப்பு
இந்தநிலையில் மத்திய மீன்வளத்துறையின் இணை மந்திரி சஞ்சீவ்குமார் பல்யான் இன்று புதுவை வந்தார். அவர் புதுவை தேங்காய்திட்டில் உள்ள மீன்பிடித்துறைமுகத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவரிடம், புதுவை மாநிலத்தில் கடல் அரிப்பை தடுக்க உதவ வேண்டும். புதுவை மாநிலத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர் லட்சுமி நாராயணன் வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து மத்திய இணை மந்திரி சஞ்சீவ்குமார் பல்யான் மரியாதை நிமித்தமாக புதுவை சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது சபாநாயகர் செல்வம் மற்றும் பலர் உடனிருந்தனர்.