தலைமறைவாக இருந்த ஆசிரியர் கைது
|காரைக்காலில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்ட தலைமறைவாக இருந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேலபொன்போற்றியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 43). இவர் நெடுங்காடு ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மேலும் அப்பகுதியிலேயே தனது மனைவியுடன் சேர்ந்து டியூசன் சென்டரையும் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் அப்பள்ளியில் படிக்கும் 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆசிரியர் கணேஷ்குமார் நடத்தி வரும் டியூசனில் படித்து வந்தார். அப்போது அந்த மாணவிக்கு, அவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நெடுங்காடு போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ்குமாரை தேடி வந்தனர். அவரது செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அவர் கும்பகோணத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கும்பகோணம் சென்ற போலீசார் கணேஷ்குமாரை கைது செய்து காரைக்கால் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.