தண்ணீர் குழாய்க்காக தோண்டிய குழியில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
|காரைக்கால் அருகே தண்ணீர் குழாய்க்காக தோண்டிய குழியில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
காரைக்கால்
தண்ணீர் குழாய்க்காக தோண்டிய குழியில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
தொழிலாளி
காரைக்காலை அடுத்த நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், வடபாதி கிராமம் அருகே தண்ணீர் குழாயை ஆய்வு செய்யும் பொருட்டு, கடந்த சில தினங்களுக்கு பெரிய குழி ஒன்றை தோண்டினர். ஆய்வு செய்தபின், அந்த குழியை மூடாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், வடபாதி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இளங்கோவன் (வயது 37) என்பவர், நேற்று இரவு அந்த குழியின் அருகில் உள்ள மதகு ஒன்றில் படுத்து தூங்கியுள்ளார்.
குழியில் விழுந்து சாவு
தூக்க கலக்கத்தில் இளங்கோவன் அந்த குழியில் தவறி விழுந்து அடிப்பட்டு மயங்கினார். இரவு முழுவதும் யாரும் அவரை பார்க்காததால், குழியிலேயே அவர் உயிரிழந்தார். இன்று காலை கிராமத்தினர் சிலர் குழியை எட்டிபார்த்தபோதுதான், அங்கே இளங்கோவன் இறந்து கிடப்பது தெரியவந்தது.
தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, இளங்கோவன் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பிரதே பரிசோதனை கூடத்தை முற்றுகையிட்டு, இளங்கோவன் சாவுக்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் என்றனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த தாசில்தார் மதன்குமார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சென்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களால் தோண்டப்பட்டு, மூடாமல் சென்ற குழியில்தான் இளங்கோவன் விழுந்து பலியாகியுள்ளார். எனவே அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்துசென்றனர்.