தோழியுடன் சுற்றுலா வந்த வாலிபர் விபத்தில் சிக்கி பலி
|நெய்வேலியில் இருந்து புதுச்சேரிக்கு தோழியுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்த போது டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.
பாகூர்
நெய்வேலியில் இருந்து புதுச்சேரிக்கு தோழியுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்த போது டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.
தோழியுடன் சுற்றுலா
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் மேட்டு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குமரன். இவரது மகன் விஜயகுமார் (வயது 23). இவர் சென்னையில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
சுதந்திரதின விடுமுறைக்காக ஊருக்கு வந்த விஜய குமார், தனது தோழியுடன் புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றார். புதுச்சேரியில் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களை இருவரும் ஜாலியாக சுற்றிப் பார்த்து ரசித்துள்ளனர். பின்னர் பிற்பகலில் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.
விபத்தில் பலி
தவளக்குப்பம் 4 முனை சந்திப்பை கடந்து வரும்போது, சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த டிரைலருடன் கூடிய டிராக்டரை திடீரென டிரைவர் திருப்பி உள்ளார். சற்றும் எதிர்பாராத நிலையில் டிராக்டர் திரும்பியதால் அதன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் மற்றும் அவரது தோழியை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தோழிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.