< Back
புதுச்சேரி
பஸ் நிலையத்தில் தாக்கப்பட்ட வாலிபர் சாவு
புதுச்சேரி

பஸ் நிலையத்தில் தாக்கப்பட்ட வாலிபர் சாவு

தினத்தந்தி
|
17 Aug 2023 4:44 PM GMT

புதுவை பஸ் நிலையத்தில் தாக்கப்பட்ட கடலூர் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

புதுச்சேரி

புதுவை பஸ் நிலையத்தில் தாக்கப்பட்ட கடலூர் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

வயிற்றில் மிதித்தனர்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஓசைமணி. அவரது மகன் பாலமுருகன் (வயது 28). இவர் அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கொலையில் தொடர்புடையவர்.

இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி இரவு பாலமுருகன் புதுவை வந்தார். திருநங்கை ஒருவரை பஸ் ஏற்றிவிட அவர், காரைக்கால் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் பாலமுருகனை தாக்கி கீழே தள்ளி வயிற்றில் மிதித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் சுருண்டு விழுந்த பாலமுருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுகுறித்து பாலமுருகனின் அண்ணன் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பரிதாப சாவு

இதற்கிடையே பாலமுருகனை, அவரது உறவினர்கள் மேல்சிகிச்சைக்காக கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரை உறவினர்கள் அங்கிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இந்தநிலையில் பாலமுருகன் திடீரென இறந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்து உருளையன்பேட்டை போலீசார் கடலூர் சென்று பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். ஏற்கனவே பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழிக்குப் பழியா?

புதுவை பஸ் நிலையத்தில் தற்போது மேம்பாட்டு பணிகள் நடப்பதால் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் கொலையாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாலமுருகன் மீது கொலை வழக்கு இருந்ததால் பழிக்குப்பழியாக அவர் தாக்கப்பட்டாரா? அல்லது திருநங்கை தொடர்பான விவகாரத்தில் தாக்கப்பட்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்