கோர்ட்டு வளாகத்தில் கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது
|புதுவை கோர்ட்டு வளாகத்தில் கஞ்சா வைத்திருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்.
புதுச்சேரி
புதுவை கோர்ட்டு வளாகத்தில் கஞ்சா வைத்திருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்.
கஞ்சா பொட்டலம்
புதுவை மங்கலம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் நாகையை சேர்ந்த ரவுடி லட்சுமணன் (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று லட்சுமணன் உள்பட 3 பேரை போலீசார் சிறையில் இருந்து விசாரணைக்காக புதுவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது லட்சுமணன் பேண்ட் பாக்கெட்டில் ஏதோ இருப்பது போல் தெரிந்தது. சந்தேகமடைந்த போலீசார், அவரை சோதனையிட்டபோது கஞ்சா பொட்டலம் (18 கிராம்), சிகரெட், புகையிலை பொருட்கள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அசந்த நேரத்தில் லட்சுமணனிடம் யாரோ மர்மநபர் கஞ்சா கொடுத்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி லட்சுமணனை கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனர். அவருக்கு கஞ்சா கொடுத்தது யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பேர் சிக்கினர்
சவரிராயலு வீதியில் உள்ள திரு.வி.க. அரசுப்பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஒதியஞ்சாலை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்ற 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த லட்சுமணன் (22), சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சேதுபதி (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, 115 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.