தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியது
|காரைக்கால் அருகே தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியதில் மாற்றுத்திறனாளி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரைக்கால்
பயணிகள் அலறல்
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் இருந்து காரைக்கால் பஸ் நிலையம் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். காரைக்கால் நகராட்சி வாரச்சந்தை அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சல் போட்டனர்.
கண் இமைக்கும் நேரத்தில் இந்த பஸ் முன்னால் சென்ற காரைக்கால் பச்சூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமு (வயது 48) என்பவரது 3 சக்கர வாகனத்தில் மோதியதுடன், சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதி நின்றது. மின் கம்பமும் தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்தது.
10 பேர் படுகாயம்
இந்த விபத்தில் மாற்றுத்திறனாளி ராமு அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்து காயமடைந்தார். பஸ்சில் பயணம் செய்தவர்களில் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் தனியார் பஸ் டிரைவர் அண்டூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (26) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.