தனியார் பஸ் மின்சார கம்பத்தில் மோதி விபத்து
|புதுவையில் நள்ளிரவில் தனியார் பஸ் மின்சார கம்பத்தில் மோதியது.
புதுச்சேரி
புதுவையில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் இரவு நேரங்களில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலோ போக்குவரத்து அதிகம் இல்லாத இடங்களிலோ நிறுத்தப்படுவது வழக்கம். இதன்படி தனியார் டவுன் பஸ் ஒன்றினை அதன் டிரைவரான மணிகண்டன் முதலியார்பேட்டை உடையார்தோட்டம் அப்துல்கலாம் நகரில் நிறுத்த நேற்று இரவு ஓட்டி வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் போடப்பட்டிருந்த தகர கொட்டகையை இடித்துதள்ளிவிட்டு அங்கிருந்த மின் கம்பம் மீது மோதி பஸ் நின்றது. இதில் மின்கம்பம் சேதமடைந்து முறிந்துவிழும் நிலையில் இருந்தது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
மின் இணைப்பு துண்டிப்பு
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் உடனடியாக மின்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின்துறையினர் அங்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
விபத்தில் சிக்கிய பஸ்சையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதுதொடர்பாக மின்துறை சார்பில் புதுவை போக்குவரத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில் ரூ.83 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.