எருமையிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்
|காரைக்காலில் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி எருமையிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
காரைக்கால்
சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கூட்டுறவு கடனை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு புதிதாக பயிர் கடன் வழங்காமல் விவசாயிகளை திட்டமிட்டு வஞ்சிக்கும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அரசை கண்டிப்பதோடு, உடனடியாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு அமைப்புகளை சீரமைக்க வேண்டும். காரைக்கால் மாவட்டத்திற்கான காவிரி நீரை பெற்று தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அகில இந்திய விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளுக்காக காரைக்கால் கடற்கரைச் சாலை சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலை அருகே எருமையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய சங்க காரைக்கால் மாவட்ட தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். செயலாளர் பழனிவேல், மாநில தலைவர் சங்கர், மாநில செயலாளர் வின்சென்ட், மாவட்ட பொறுப்பாளர் தமீம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.