2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த நர்சிங் மாணவி
|புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள கண் மருத்துவமனை 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த நர்சிங் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பத்தில் உள்ள கண் மருத்துவமனை 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த நர்சிங் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நர்சிங் மாணவி
தவளக்குப்பத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு சிதம்பரத்தை சேர்ந்த கவுசல்யா (வயது 17) என்பவர் நர்சிங் படித்து வருகிறார்.
இன்று காலை அவர், 2-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது முதல் தளத்தில் இருந்த தகர கொட்டகையில் விழுந்து அதன்பின் கீழே விழுந்தார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடலிலும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.
போலீசார் விசாரணை
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அவரை மீட்டு அதே மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்கொலை முயற்சியா?
இருப்பினும் மாணவி உண்மையிலேயே தவறி விழுந்தாரா?. தற்கொலை செய்யும் நோக்கில் 2-வது மாடியில் இருந்து குதித்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர், கீழே நின்றபடி சாவியை தூக்கி போட்ட போது அதை பிடிக்க முயன்று மாணவி தவறி கீழே விழுந்ததாக மருத்துவமனை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.