< Back
புதுச்சேரி
ஓட, ஓட விரட்டி வாலிபர்கள் மீது கொலைவெறி தாக்குதல்
புதுச்சேரி

ஓட, ஓட விரட்டி வாலிபர்கள் மீது கொலைவெறி தாக்குதல்

தினத்தந்தி
|
4 Aug 2022 11:17 PM IST

பூமியான்பேட்டையில் முன்விரோத தகராறில் ஓட, ஓட விரட்டி வாலிபர்களை தாக்கிய 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர்.

மூலக்குளம்

பூமியான்பேட்டையில் முன்விரோத தகராறில் ஓட, ஓட விரட்டி வாலிபர்களை தாக்கிய 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர்.

முன்விரோதம்

புதுவை அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பாலாஜி (வயது 27), பெயிண்டர். இவருக்கும், பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்த முருகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மோதி வந்தனர்.

நேற்று முருகன், குடிபோதையில் போன் செய்து பாலாஜியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு பாலாஜியும் அவரை திட்டியுள்ளார். அப்போது முருகன், அவரிடம் 'தைரியம் இருந்தால் நேரில் வா பார்க்கலாம்' என்று கூறியுள்ளார்.

ஓட ஓட விரட்டி தாக்குதல்

உடனே பாலாஜி தனது நண்பர்கள் வேலா, சண்முகம் உள்பட 6 பேருடன் அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தயாராக இருந்த முருகன் தனது கூட்டாளிகளான பூமியான்பேட்டையை சேர்ந்த அப்பாஸ், கார்த்திக், ஐஸ் சதீஷ், குரு, சுந்தர் ஆகியோருடன் சேர்ந்து பாலாஜி மற்றும் அவரது நண்பர்களை இரும்பு கம்பி, பீர் பாட்டில், கல்லால் தாக்கினர்.

பாலாஜியும், அவரது நண்பர்களும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இருப்பினும் முருகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலாஜி தரப்பை ஓட, ஓட விரட்டி சரமாரியாக தாக்கினர். இதில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்களான வேலா, சண்முகம் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

4 பேர் சிக்கினர்

இதையடுத்து புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வேலா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் முருகன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்