திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
|தொடர் விடுமுறையால் திரண்டு வந்த பக்தர்கள் திருநள்ளாறு சனீஸ்வரரை தரிசித்து தோஷம் நீங்க தீர்த்த குளத்தில் புனித நீராடினர்.
திருநள்ளாறு
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சனி மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்து சனீஸ்வர பகவானை தரிசிக்க பக்தர்கள் குவிவது வழக்கம்.
தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை எதிரொலியாக இன்று அதிகாலை முதலே புதுச்சேரி, சென்னை, கடலூர், காஞ்சீபுரம், சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதிகாலையில் நடைதிறப்பு
சனிக்கிழமைகளில் வழக்கமாக கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்படும். ஆனால் இன்று அதிகாலை 4.30 மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதல் 2 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்றது. மேலும் தீர்த்த குளமான நளன் தீர்த்தத்தில் அதிகாலை முதல் பொதுமக்கள் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் புனித நீராடி, கோவிலில் எள் தீபம் ஏற்றி தோஷங்கள் நீங்க வேண்டுதலை நிறைவேற்றினர்.
பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.