நகை வியாபாரியை பீர் பாட்டிலால் தாக்கி ரூ.3½ லட்சம் கொள்ளை
|புதுவை அருகே நகை வியாபாரியை பீர் பாட்டிலால் தாக்கி ரூ.3½ லட்சத்தை 4 பேர் கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
புதுச்சேரி
புதுவை அருகே நகை வியாபாரியை பீர் பாட்டிலால் தாக்கி ரூ.3½ லட்சத்தை 4 பேர் கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
நகை வியாபாரி
விழுப்புரம் மாவட்டம் மருதூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). இவர் பழைய நகை மற்றும் அடகு நகைகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரகாஷ் தொழில் விஷயமாக புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் இன்று வந்தார். வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு பகுதியில் வந்த அவரை மர்ம கும்பல் திடீரென்று வழி மறித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், அவர்களிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பல் பிரகாசை பீர் பாட்டிலால் தாக்கி அவரிடம் இருந்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
4 பேர் கும்பல்
இது குறித்து முதலியார்பேட்டை போலீசில் பிரகாஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கைவரிசை காட்டிய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.