ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி
|காரைக்கால் நெடுங்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் அவலத்தால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
காரைக்கால்
காரைக்கால் நெடுங்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் அவலத்தால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
அரசு பள்ளி
காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டில் பண்டித ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இந்த பள்ளியில் மாணவர்கள் சிலர் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் இங்கு பணியிட மாற்றலாகி வந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வந்ததால் மாறுதலாகி சென்றுவிட்டனர்.
ஒரு ஆசிரியர்
இதனால் கடந்த 3 மாதங்களாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய ஆசிரியர் கலந்தாய்வில் ஆசிரியர்கள் யாரும் இப்பள்ளியை தேர்வு செய்யவில்லை.
இதனால் இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியர் ஒருவர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகிறார். அவ்வப்போது பொறுப்பு ஆசிரியர்கள் 2 பேர் வந்து வகுப்பு எடுத்து வருகின்றனர். குறிப்பாக கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேள்விக்குறியாகும் கல்வி
காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 21-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் இங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் புதுச்சேரி கல்வித்துறை நெடுங்காடு பள்ளியில் ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி மாணவர்களின் கல்வி தரம் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.