< Back
புதுச்சேரி
உணவு வினியோக நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு
புதுச்சேரி

உணவு வினியோக நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு

தினத்தந்தி
|
11 July 2023 9:38 PM IST

அபிஷேகப்பாக்கத்தில் தனியார் உணவு வினியோக நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 4 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

அபிஷேகப்பாக்கத்தில் தனியார் உணவு வினியோக நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 4 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

செல்போன் பறிப்பு

தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் பிரபுதாஸ் (வயது 39). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் உணவு வினியோக நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து அபிஷேகப்பாக்கம்- உருவையாறு ரோட்டில் செல்போனில் பேசியபடியே வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அங்குள்ள கருமகாரிய கொட்டகை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் பிரபுதாசை நிறுத்தி, வில்லியனூருக்கு வழி கேட்டனர். பிரபுதாஸ் வழி சொல்லிக்கொண்டு இருந்தபோது திடீரென அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.

வாகன சோதனை

இது தொடர்பாக பிரபுதாஸ் அளித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அபிஷேகப்பாக்கம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வேகமாக வந்த 4 வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று, போலீஸ் முறைப்படி விசாரித்தனர்.

4 பேர் கைது

விசாரணையில் அவர்கள் அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ்கிருஷ்ணா (18), குணாலன் (18), சதீஷ் என்கிற சரண் (20), ஜெய்அபிதரன் (20) என்பதும், பிரபுதாசிடம் செல்போன் பறித்ததும் தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 1 பட்டா கத்தி, 2 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்