கள்ளக்காதலை கண்டித்த கட்டிட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை
|புதுவையில் கள்ளக்காதலை கண்டித்த கட்டிட தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி
புதுவையில் கள்ளக்காதலை கண்டித்த கட்டிட தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
கட்டிட தொழிலாளி
புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரி வீதியில் 2 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. வீட்டின் தரைத்தளத்தில் குடோன் மற்றும் கடைகள், முதல் மற்றும் 2-ம் தளத்தில் தலா 8 வீடுகள் உள்ளன.
2-வது தளத்தில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (வயது33). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதம் (30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் சுப்பிரமணியிடம் கோபித்து கொண்டு ரஞ்சிதம் அவரின் அக்காள் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். கோபித்து கொண்டு சென்ற மனைவியை சந்தித்து சமாதானம் செய்து வீட்டிற்கு வரும்படி சுப்பிரமணி அழைத்துள்ளார். ஆனால், உடனடியாக கணவருடன் செல்ல அவர் மறுத்து விட்டார்.
கழுத்து அறுத்து கொலை
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் ரஞ்சிதம் அவரின் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் கணவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். யாரோ அவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்தது தெரியவந்தது.
உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிபோய் நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
அங்கு குற்றவாளி விட்டுச் சென்று இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளத்தொடர்பு அம்பலம்
தொடர்ந்து கொலையுண்ட சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில், ரஞ்சிதம் மற்றும் உறவினரான சாரம் மொட்டைத்தோப்பு பகுதியை சேர்ந்த மாரியப்பன் (30) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், ரஞ்சிதம், மாரியப்பன் ஆகியோருக்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த சுப்பிரமணி தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சிதம், மாரியப்பன் ஆகியோர் திட்டமிட்டு சுப்பிரமணியை கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் நாடகமாடியது தெரியவந்துள்ளது. அதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளத்தொடர்பை கண்டித்த கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.