மொபட் மீது மோதி கால்வாயில் பாய்ந்த கார்; 3 பேர் பலி
|காரைக்கால் அருகே மொபட் மீது மோதி கால்வாயில் கார் பாய்ந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெயிலர் படம் பார்த்து விட்டு திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
கோட்டுச்சேரி
காரைக்கால் அருகே மொபட் மீது மோதி கால்வாயில் கார் பாய்ந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெயிலர் படம் பார்த்து விட்டு திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
அதிவேகமாக வந்த கார்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ராஜாத்தி நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 25). இவர் தனது நண்பர்கள் காரைக்கால் அம்மன் கோவில்பத்து சுனாமி குடியிருப்பை சேர்ந்த அருண் (24), காரைக்கால் மாரியம்மன் கோவில் தெரு கவிதா காலனியை சேர்ந்த கணபதி (25), தஞ்சாவூர் ஒரத்தநாடு பள்ளிவாசலை தெருவைச் சேர்ந்த வாசிம் முஷரப் (22) ஆகியோருடன் நேற்று இரவு ஜெயிலர் படம் பார்க்க மயிலாடுதுறைக்கு சென்றார்.
2-வது காட்சி படம் பார்த்து விட்டு, அவர்கள் காரில் காரைக்காலுக்கு திரும்பினர். காரை சரவணன் ஓட்டினார். அதிகாலை 3.30 மணி அளவில் காரைக்கால் கோட்டுச்சேரி போலீஸ் நிலையம் அருகே பாரதியார் சாலையில் கார் அதிவேகமாக வந்தது.
கால்வாயில் கவிழ்ந்தது
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் எதிரே நடைபயிற்சி மேற்கொள்ள வந்த மேலஓடுதுறையை சேர்ந்த செல்வம் (48) என்பவரது மொபட் மீது பயங்கரமாக மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் செல்வம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
இருப்பினும் மோதிய வேகத்தில் கார் நிற்காமல் சாலையோரம் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் வந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.
3 பேர் பலி
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோட்டுச்சேரி போலீசார், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காரில் சிக்கி தவித்த 4 பேர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் ஆகிய 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்ததில் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம், காரில் வந்த வாசிம் முஷரப், கணபதி ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. மேலும் அருண், சரவணன் ஆகியோருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து காரைக்கால் நகர போக்கு வரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயிலர் படம் பார்த்து வந்தபோது கார்-மொபட் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.