< Back
புதுச்சேரி
மீனவரின் தூக்கத்தால் கரை ஒதுங்கிய விசைப்படகு
புதுச்சேரி

மீனவரின் தூக்கத்தால் கரை ஒதுங்கிய விசைப்படகு

தினத்தந்தி
|
13 July 2023 9:47 PM IST

கோட்டுச்சேரி அருகே கடலில் வலைவிரித்து இருந்தநிலையில் மீனவரின் தூக்கத்தால் கரை ஒதுங்கிய விசைப்படகு தரைதட்டி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டுச்சேரி

கடலில் வலைவிரித்து இருந்தநிலையில் மீனவரின் தூக்கத்தால் கரை ஒதுங்கிய விசைப்படகு தரைதட்டி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்கால் மீனவர்கள்

காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடிமேட்டைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44). இவருக்கு சொந்தமான விசைப்படகு நேற்று மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றது. படகை காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த ரவீன் (26) என்பவர் ஓட்டினார்.

இந்த படகில் காரைக்கால்மேடு, காளிக்குப்பம், சந்திரபாடி, பட்டினச்சேரி பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் இருந்தனர். மீன் பிடிப்பதற்கான வலையை வீசிவிட்டு மீனுக்காக காத்திருந்தனர். நள்ளிரவில் ரவீன் உள்பட மீனவர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கி விட்ட நிலையில் கடலில் நங்கூரம் போடவில்லை என்று கூறப்படுகிறது.

தரை தட்டி நின்றது

இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த படகு அலையின் வேகத்துக்கு ஏற்ப நகர்ந்து இன்று காலை மண்டபத்தூர் அருகே மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடி - சின்னலூர்பேட்டைக்கு இடையே கரை ஒதுங்கி, தரை தட்டி நின்றது.

இதற்கிடையே தூக்கத்தில் இருந்து எழுந்த மீனவர்கள், படகு தரைதட்டி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சந்திரபாடி மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்து, தரை தட்டிய படகில் இருந்த மீனவர்களை மீட்டு அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் கடற்கரை மணலில் சிக்கிய படகு, மற்றொரு படகு மூலம் கயிறு கட்டி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.

மீனவரின் தூக்கத்தால் தானாக கரை ஒதுங்கி படகு தரை தட்டிய சம்பவம் மீனவ கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்