13 ஆண்டுகளாக அரசலாற்றில் நிற்கும் விசைப்படகு
|ஆள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு 13 ஆண்டுகளாக அரலாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டுச்சேரி
ஆள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு 13 ஆண்டுகளாக அரலாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆள் கடத்தல் வழக்கு
புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டுக்கு மீன்பிடி படகு மூலம் கடந்த 2010-ம் ஆண்டு இலங்கை அகதிகள் 15 பேரை சிலர் அனுப்ப முயன்றனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து போதுமான ஆதாரம் இல்லை என தொடர்புடைய அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சேதமான விசைப்படகு
இந்த வழக்கில் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அகதிகளை அனுப்புவதற்காக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு காரைக்காலை சேர்ந்தவருக்கு சொந்தமானதாகும். வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த படகு காரைக்கால் சுங்கத்துறை அலுவலகம் எதிரில் அரசலாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
13 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அது மக்கி ஆற்றில் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே நீரோட்டத்தை தடுக்கும் நிலையில் உள்ள அந்த விசைப்படகை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.