< Back
புதுச்சேரி
லாஸ்பேட்டையில் தொண்டு நிறுவன உரிமையாளரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
புதுச்சேரி

லாஸ்பேட்டையில் தொண்டு நிறுவன உரிமையாளரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது

தினத்தந்தி
|
17 Oct 2023 10:50 PM IST

லாஸ்பேட்டையில் தொண்டு நிறுவன உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை

லாஸ்பேட்டையில் தொண்டு நிறுவன உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாக்குதல்

புதுச்சேரி கருவடிக்குப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராமர். அவரது மனைவி வரலட்சுமி (வயது 39). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமர் இறந்து விட்டார். எனவே வரலட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் வரலட்சுமிக்கு உறவினரான தொண்டு நிறுவனம் நடத்தி வரும் காளிதாஸ் என்பவர் உதவிகள் செய்து வந்தார். இதற்கு அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக காளிதாசுக்கும், சக்திவேலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று இரவு வரலட்சுமியின் வீட்டிற்கு சென்ற காளிதாஸ் மீது சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

7 பேர் கைது

இது குறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சக்திவேலுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்ற விக்கி (25), லாஸ்பேட்டை விக்னேஷ் என்ற விக்கி (21), சின்ன கோட்டக்குப்பம் விஜய் என்ற ஜேக் சஞ்சய் (23) மற்றும் 3 சிறுவர்கள் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் 7 பேரும் இடையஞ்சாவடி ரோட்டில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னதாக போலீசார் சுற்றிவளைத்தபோது தப்பி ஓட முயன்ற ஜேக் சஞ்சய் தவறி விழுந்ததில் அவரது 2 கைகளும் முறிந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, மாவுகட்டு போடப்பட்டது. கைது செய்யப்பட்ட 7 பேரும் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் சக்திவேல் உள்பட 4 பேர் காலாப்பட்டு மத்திய சிறையிலும், சிறுவர்கள் 3 பேர் அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்