< Back
புதுச்சேரி
தந்தை, மகன்கள் உள்பட 6 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
புதுச்சேரி

தந்தை, மகன்கள் உள்பட 6 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

தினத்தந்தி
|
22 Dec 2022 5:11 PM GMT

அறையில் அடைத்து வைத்து 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை, மகன்கள் உள்பட 6 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

புதுச்சேரி

அறையில் அடைத்து வைத்து 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை, மகன்கள் உள்பட 6 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

வாத்துப்பண்ணை

புதுவை மங்கலம் அருகே உள்ள கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 60). இவர் கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் வாத்துப்பண்ணை நடத்தி வந்தார். இவரது மனைவி சுபா (45).

இவர்களது மகன்கள் ராஜ்குமார் (27) சரத்குமார் (25). இவர்களுடன் கன்னியப்பனின் மாமனார் காத்தவராயன் (70) மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாம்பலப்பட்டு பகுதியை சேர்ந்த பசுபதி (21) பெரிய முதலியார்சாவடி சிவா (21) வானூர் மூர்த்தி (21) கண்டமங்கலம் ஆறுமுகம் (58), வில்லியனூர் வேலு (24) ஆகியோர் அங்கு வேலை செய்து வந்தனர்.

இவர்களில் ஒருவரது வளர்ப்பு மகள்கள் 2 பேர் உள்பட 5 சிறுமிகளும் அங்கு வேலை செய்து வந்தனர். கொத்தடிமைகளாக நடத்தியதுடன் அந்த சிறுமிகளை அறையில் அடைத்து வைத்து கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்.

பரபரப்பான விவகாரம்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள், குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 4.11.2020 அன்று அங்கு சென்று சோதனை நடத்தினர்.

இதில் ஒரு சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த சிறுமிகள் 5 பேரையும் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி, வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் 9 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

சாகும் வரை ஆயுள் தண்டனை

இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு முடிவடைந்து இன்று பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் கன்னியப்பன், இவரது மகன்கள் சரத்குமார், ராஜ்குமார் மற்றும் பசுபதி, சிவா, மூர்த்தி ஆகிய 6 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. காத்தவராயன், சுபா ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஆறுமுகத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட 9 பேருக்கும் மொத்தமாக ரூ.1 லட்சத்து 97 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வேலு விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடும், மற்ற 4 சிறுமிகளுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பச்சைமுத்து ஆஜரானார்.

மேலும் செய்திகள்