அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் 6-ந்தேதி ஊர்வலம்
|புதுவையில் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி வருகிற 6-ந்தேதி ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சரை சந்தித்து பேச ஒருங்கிணைப்புக்குழு மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி
அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி வருகிற 6-ந்தேதி ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சரை சந்தித்து பேச ஒருங்கிணைப்புக்குழு மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
சம்பளமில்லை
புதுவை அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. குறிப்பாக பாசிக் 115 மாதம், பாப்ஸ்கோ 68 மாதம், அமுதசுரபி 31 மாதம், ரேசன்கடை 55 மாதம், வேளாண் அறிவியல் நிலையம் 45 மாதம், பாண்டெக்ஸ் 47 மாதம், பாண்பேப் 60 மாதம், வீட்டுவசதி வாரியம் 52 மாதம் என பல்வேறு நிறுவனங்களில் சம்பளங்கள் வழங்கப்படவில்லை.
இந்த சம்பளங்களை வழங்கக்கோரி அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தினக்கூலி ஊழியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் 15 முதல் 20 ஆண்டுகள் ஆன நிலையிலும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்-அமைச்சரோடு பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தீர்வு காணப்படவில்லை.
கோரிக்கை மாநாடு
இதைத்தொடர்ந்து அனைத்து அரசு சார்பு நிறுவன ஊழியர்களும் ஒருங்கிணைந்து போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழுவை உருவாக்கியுள்ளனர்.
இந்த குழு சார்பில் கோரிக்கை மாநாடு புதுவை சுதேசி மில் அருகே நடந்தது. மாநாட்டுக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
6-ந்தேதி ஊர்வலம்
கூட்டத்தில் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு குழு அமைத்து கலந்துபேசி உரிய தீர்வு உடனடியாக காணப்பட வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.