வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
|மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுச்சேரி
மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மருத்துவ கல்லூரி மாணவி
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி(வயது 21). புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
திருபுவனை பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (34). இவர் பொறியியல் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர். இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக பிரியதர்ஷினி படித்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது பிரியதர்ஷினியை சந்தித்த நிலையில் இருவரும் காதலித்துள்ளனர்.
இந்த நிலையில் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரியதர்ஷினி கடந்த 16.5.2012 அன்று விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 ஆண்டு சிறை
இதுகுறித்து மாணவி பிரியதர்ஷினியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீப் மீது திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பிரதீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.