< Back
புதுச்சேரி
மொபட்டில் சென்ற நர்சிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
புதுச்சேரி

மொபட்டில் சென்ற நர்சிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
6 Oct 2023 10:06 PM IST

தவளக்குப்பம் அருகே மொபட்டில் சென்ற நர்சிடம் 5 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் ரோகிணி நகரை சேர்ந்தவர் சிவபெருமாள். மின்துறை ஊழியர். இவரது மனைவி பாரதி (வயது 39), தனியார் மருத்துவக் கல்லூரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து மொபட்டில் வீட்டுக்கு சென்றார். தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர்.

மோட்டார் சைக்கிள் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மர்மநபர், திடீரென்று பாரதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதி திருடன்... திருடன்.. என்று கூச்சலிட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஆனால் மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பாரதி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலி சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன் புதுவை காந்தி வீதியில் மொபட்டில் சென்ற நர்சிடம் மர்மநபர்கள் 3½ பவுன் தாலி சங்கிலி பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது. புதுவையில் சமீப காலமாக தனியாக மொபட்டில் செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்