வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கிய 5 பேர் கைது
|வில்லியனூர் அருகே கொள்ளையடிக்கும் நோக்கில் வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே கொள்ளையடிக்கும் நோக்கில் வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மர்ம நபர்கள்
வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது நாட்டு வெடிகுண்டு, பட்டாக் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளையடிக்க திட்டம்
விசாரணையில் புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான புதுக்கடையில் தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி தாடி அய்யனாரின் நண்பர் கொத்து ஏழுமலையுடன் தொடர்புடைய கூட்டாளிகள் என்றும், வழக்கு செலவிற்காக கொள்ளையடிக்கும் திட்டத்துடன் வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் அவர்கள் தமிழக பகுதியான புதுக்கடை வடபுற கீழ்வார்த்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜோசப் என்ற விஜி (வயது 23), வில்லியனூர் கணக்கர் மடத்தை சேர்ந்த சூர்யா (23), தமிழக பகுதியான தென்னல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (25), தவளக்குப்பம் பைரவர் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற பாட்டில் மணி (19), கரிக்கலாம்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் வேலாயுதம் என்ற வேலு (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிகுண்டு, பட்டாகத்தி, மிளகாய் பொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.