
ஹெல்மெட் அணியாத 46 ஆயிரம் பேருக்கு அபராதம்

ஹெல்மெட் அணியாத 46 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 26 ஆயிரம் பேரின் லைசென்சுகளை தற்காலிகமாக நீக்க பரிந்துரைத்துள்ளதாகவும் போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திரகுமார் யாதவ் கூறினார்.
புதுச்சேரி
ஹெல்மெட் அணியாத 46 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 26 ஆயிரம் பேரின் லைசென்சுகளை தற்காலிகமாக நீக்க பரிந்துரைத்துள்ளதாகவும் போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திரகுமார் யாதவ் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு குழு
சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த சுப்ரீம்கோர்ட்டு ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவானது மாநிலங்கள்தோறும் சென்று சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுகள் அமல்படுத்தப்படுகிறதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) புதுச்சேரி வரும் இந்த குழு, அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா தலைமையில் ஏற்கனவே அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடத்தி உள்ளனர்.
இந்தநிலையில் போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திரகுமார் யாதவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
46 ஆயிரம் பேருக்கு அபராதம்
புதுவையில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். அதேபோல் இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது தவறாமல் ஹெல்மெட் அணியவேண்டும்.
புதுவையில் இதுவரை ஹெல்மெட் அணியாமல் சென்ற 46 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 26 ஆயிரம் பேரின் டிரைவிங் லைசென்சுகளை தற்காலிமாக ரத்துசெய்ய போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தவறு செய்பவர்களின் லைசென்சுகள் ரத்து செய்யப்படும்.
விழிப்புணர்வு
சாலை போக்குவரத்து விதிகளை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்களை நவீன கருவிகள் மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.