< Back
புதுச்சேரி
133 மையங்களில் 46 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்
புதுச்சேரி

133 மையங்களில் 46 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

தினத்தந்தி
|
20 July 2023 11:41 PM IST

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மேல்நிலை எழுத்தர் தேர்வு நடக்கிறது. இதனை 133 மையங்களில் 46 ஆயிரம் பேர் எழுகிறார்கள்.

புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மேல்நிலை எழுத்தர் தேர்வு நடக்கிறது. இதனை 133 மையங்களில் 46 ஆயிரம் பேர் எழுகிறார்கள்.

மேல்நிலை எழுத்தர் தேர்வு

புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் 116 மேல்நிலை எழுத்தர் (யு.டி.சி.) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடக்கிறது.

இந்த தேர்வை புதுச்சேரியை சேர்ந்த 46 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக புதுச்சேரியில் 107, காரைக்காலில் 13, மாகியில் 5, ஏனாமில் 8 மையங்கள் என மொத்தம் 133 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வை கண்காணிக்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஹால் டிக்கெட்

விண்ணப்பதாரர்கள் அவர்களது ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஹால் டிக்கெட்டில், தேர்வு எழுதுபவர்களின் பாஸ்போர்ட் புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி, கையொப்பம் இட்டு எடுத்து வரவேண்டும்.

தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு இவற்றில் ஏதேனும் ஒரு அசலை கட்டாயம் கொண்டு வரவேண்டும். ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். வேறு மையங்களில் தேர்வு எழுத முடியாது.

தேர்வு மைய நுழைவு வாயில் சரியாக காலை 10 மணிக்கு மூடப்படும். அதற்கு பின் தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதி கிடையாது. எனவே தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு வந்து சேர வேண்டும்.

குற்ற நடவடிக்கை

தேர்வர்கள் கருப்பு நிற பால் பாய்ண்ட் பேனா, ஹால் டிக்கெட் மற்றும் அசல் அடையாள அட்டை ஆகியவை மட்டுமே தேர்வு மையத்திற்கு கொண்டு வரவேண்டும். கைப்பைகள், செல்போன், புளு டூத் சாதனங்கள், ஹெட்போன்கள், கால்குலேட்டர்கள், பென் டிரைவ் போன்ற இதர எலக்ட்ரானிக் சாதனைங்களை தேர்வு நேரத்தில் வைத்திருப்பது குற்றமாக கருதப்பட்டு தேர்வில் இருந்து வெளியேற்றப்படுவதோடு, குற்றவியல் நடைமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recruitment.py.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். தேர்வர்கள் தங்களது தேர்வு மையங்களின் இருப்பிடங்களை முன்னரே அறிந்து கொண்டு தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணி அளவில் சென்றடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக ஏதேனும் விவரம் அல்லது உதவி தேவைப்பட்டால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் நாளை (சனிக்கிழமை) வரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்