22 மையங்களில் 4,496 பேர் எழுதினர்
|கள உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை 22 மையங்களில் 4,496 பேர் எழுதினர்.
புதுச்சேரி
கள உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை 22 மையங்களில் 4,496 பேர் எழுதினர்.
எழுத்து தேர்வு
புதுச்சேரி நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 30 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி புதுவையில் 22 மையங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடந்தது. அதாவது புதுவையில் 16 மையங்கள், காரைக்காலில் 3 மையங்கள், மாகியில் 1 மையம், ஏனாமில் 2 மையங்களில் தேர்வு நடந்தது.
இந்த தேர்வு எழுத மொத்தம் 7,859 பேர் (புதுச்சேரி - 6,250, காரைக்கால் - 906, மாகி - 136, ஏனாம் - 567) விண்ணப்பித்து இருந்தனர். இதில் 4,496 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இது 57.21 சதவீதம் ஆகும். 3,363 (42.79 சதவீதம்) தேர்வு எழுதவில்லை. தேர்வு பணியில் 1,000-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீவிர பரிசோதனை
தேர்வர்கள் காலை 9 மணி முதலே தேர்வு மையத்துக்கு வரத்தொடங்கினர். அவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நுழைவுச்சீட்டுடன் அடையாள அட்டை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
தேர்வர்கள் கைப்பைகள், செல்போன், புளூ டூத் சாதனங்கள், ஹெட் போன், கால்குலேட்டர், பென் டிரைவ் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. காலை 10 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்தில் தேர்வு எழுத 906 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 446 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டாக்டர் கலைஞர் பட்ட மேற்படிப்பு மையம், பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடந்த இந்த தேர்வை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.