டிரைவர் கொலையில் 4 பேர் கைது
|புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி டிரைவர் கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி டிரைவர் கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு வீச்சு
புதுவை முதலியார்பேட்டை தியாகுமுதலியார் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜூ (வயது 32). டிரைவர். கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்று விட்டனர்.
இந்தநிலையில் ராஜூ மட்டும் தனியாக வசித்து வந்தார். தேங்காய்த்திட்டில் உறவினர் இறந்து விட்ட இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அதே சாவுக்கு வந்து இருந்த வேல்ராம்பட்டை சேர்ந்த நிர்மல், ஹரி ஆகியோரை ராஜூ தாக்கியதாக தெரிகிறது. அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்திய நிலையில் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்தநிலையில் ராஜூவை முதலியார்பேட்டை தியாகுமுதலியார் குடியிருப்பில் உள்ள அவரது வீடு அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.
4 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்து முதலியார்பேட்டை போலீசார் அங்கு சென்று விசாரித்ததில், சவ ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து நிர்மல், ஹரி ஆகியோர் தான் மோட்டார் சைக்கிளில் வந்து ராஜூவை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் தனிப்படையினர் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்த கொலை தொடர்பாக நிர்மல், ஹரி மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த லோகபிரகாஷ், மோகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க கற்று கொண்டது எப்படி? வேறு ஏதாவது வெடிகுண்டுகளை தயாரித்து பதுக்கி வைத்துள்ளனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ராஜூ கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இன்று மாலை கொலைசெய்யப்பட்ட ராஜூவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
---------