< Back
புதுச்சேரி
ரூ.4 லட்சம் திருடிய  கொள்ளை கும்பல் தலைவன் கைது
புதுச்சேரி

ரூ.4 லட்சம் திருடிய கொள்ளை கும்பல் தலைவன் கைது

தினத்தந்தி
|
4 Sep 2023 6:05 PM GMT

புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து பணத்தை திருடிய ஆந்திராவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து பணத்தை திருடிய ஆந்திராவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.4 லட்சம் திருட்டு

புதுவை கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது73). இவர் கடந்த ஆண்டு மே மாதம் 6-ந் தேதி இ.சி.ஆர்.சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

போகும் வழியில் இளநீர் கடையில் நிறுத்தி இளநீர் வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது பெட்டியில் இருந்த பணம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதேபோல் கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளர் பழனிபாண்டி என்பவரின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தனிப்படை

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வங்கியில் பணம் எடுக்க வரும் முதியவர்களை குறி வைத்து மர்மகும்பல் ஒன்று பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான புகைப்படங்களை துருப்புச் சீட்டாக வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதில் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த கொள்ளை கும்பல் என்பது தெரியவந்தது.

கொள்ளை கும்பல் தலைவன் கைது

இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொள்ளை கும்பல் தலைவன் ஆந்திரா சித்தூர் நகரியை சேர்ந்த கங்கா (43) என்பவரை போலீசார் கைது செய்து புதுவை அழைத்து வந்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்