38 பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி
|புதுவையில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்த 38 பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமிகளை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி
புதுவையில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்த 38 பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமிகளை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆன்லைன் வியாபாரம்
புதுச்சேரி குரும்பாபேட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ்-அப் செயலிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் குழுவாக சேர்ந்து முதலீடு செய்தால் ஆன்லைன் வியாபாரம் மூலம் முதலீடு செய்த பணத்திற்கு மாதந்தோறும் 20 முதல் 30 சதவீதம் வரை வட்டி அல்லது லாபம் வழங்கப்படும். மேலும் புதிய நபர்களை சேர்த்தால் அவர்களுக்கு ரூ.500 போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை நம்பி குரும்பாபேட் பகுதியை சேர்ந்த 20 பேர் அந்த குழுவில் சேர்ந்தனர். அந்த குழுவில் பலர் நிர்வாகிகளாக இருந்தனர். அவர்கள் அடிக்கடி ஆன்லைன் மூலம் கூட்டம் நடத்தி, தொழில் தொடர்பாக ஆலோசித்து வந்தனர்.
இதனை நம்பிய 20 பேரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். அவர்களுக்கு முதல் மாதம் முடிவடைந்த உடன் முதலீடு செய்த பணத்தில் 30 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டது. புதிய உறுப்பினர்களை ஆன்லைன் வியாபாரத்தில் சேர்த்து விட்டால் அவர்களுக்கு போனஸ் தொகை ரூ.500-ம் வழங்கப்பட்டது.
ரூ.42 லட்சம் மோசடி
இதனை நம்பிய அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் வாட்ஸ் அப் குழுவில் இணைந்தனர். அவர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 லட்சம் வரை ஆன்லைன் மூலம் முதலீடு செய்தனர். இவ்வாறு மொத்தம் 38 பெண்கள் ரூ.42 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் அந்த வாட்ஸ் அப் குழு திடீரென கலைக்கப்பட்டது. உடனே அவர்கள் அந்த வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி அதில் நிர்வாகிகளாக இருந்தவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.
இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த குரும்பாபேட் பகுதியை சேர்ந்த லட்சுமி புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து 38 பெண்களிடம் ரூ.42 லட்சம் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.
ஏமாற வேண்டாம்
இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில், 'புதுச்சேரி பகுதியை சேர்ந்த இன்னும் நிறைய பெண்கள், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இதேபோல பணத்தை ஆன்லைனில் செலுத்தி ஏமாந்து இருக்கலாம் என தெரிகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதேபோல் குழு தொடங்கப்பட்டு ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. எனவே இது போன்ற ஆன்லைன் மோசடியில் சிக்கி ஏமாற வேண்டாம்' என்றார்.