மோட்டார் சைக்கிள்கள் திருடிய ஜிப்மர் ஊழியர் உள்பட 3 பேர் கைது
|புதுவையில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி
புதுவையில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 10 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மோட்டார் சைக்கிள் திருட்டு
புதுவை நகரப்பகுதியில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து வருகிறது. மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் புதுவை எல்லைப்பகுதியில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
ஜிப்மர் ஊழியர்
அப்போது அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோவிந்தராஜன் நகரை சேர்ந்த திலீப்குமார் (வயது 24), குமாரநத்தத்தை சேர்ந்த அனிஷ்குமார் (25) என்பது தெரியவந்தது.
திலீப்குமார் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வோருக்கு உணவு சப்ளை செய்யும் பணி செய்து வந்துள்ளார். காமராஜர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலின் மாடியில் தங்கியிருப்பதும், அனிஷ்குமார் ஜிப்மரில் ஒப்பந்த ஊழியராக பணிசெய்வதும் தட்டாஞ்சாவடி ஜி.டி.நகரில் தங்கியிருந்து வந்துள்ளார்.
பறிமுதல்
தங்களது பணியில் போதிய வருமானம் இல்லாததால் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்று செலவு செய்வதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 10 திருட்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
இவர்களுடன் வைத்திக்குப்பத்தை சேர்ந்த கொத்தனார் ராஜேஷ் (25) என்பவரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரையும் கைது செய்த லாஸ்பேட்டை போலீசார் அவரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.