ராட்சத அலையில் சிக்கிய பெண் உள்பட 3 பேர் மீட்பு
|புதுச்சேரியில் ராட்சத அலையில் சிக்கிய பெண் உள்பட 3 பேரை ஊர்காவல் படை வீரர் பத்திரமாக மீட்டார்.
புதுச்சேரி
புதுச்சேரியில் ராட்சத அலையில் சிக்கிய பெண் உள்பட 3 பேரை ஊர்காவல் படை வீரர் பத்திரமாக மீட்டார்.
ராட்சத அலையில் சிக்கிய பெண்
பெங்களூருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றிபார்த்த அவர்கள் இனறு காலை 11 மணியளவில் புதுவை கடற்கரை டூப்ளே சிலை அருகே வந்தனர். கடல் அலையை கண்டவுடன் உற்சாக மிகுதியில் அவர்கள் குளித்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் ராஜேஷ்குமாரின் உறவுக்கார பெண் தியா சாகித் (31) இழுத்து செல்லப்பட்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அபயக்குரல் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஊர்காவல் படை வீரர் அன்பரசு விரைந்து சென்று கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட தியா சாகித்தை பொதுமக்கள் உதவியுடன் கரைக்கு மீட்டு வந்தார். தண்ணீர் அதிகளவு குடித்ததால் அவர் மயக்கி நிலையில் இருந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஊர்காவல் படை வீரருக்கு பாராட்டு
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சில மணி நேரத்தில் அதே பகுதியில் பெங்களூருவை சேர்ந்த மயூர் (வயது13), கேதரவால் (30) ஆகியோர் நண்பர்களுடன் கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது மயூர், கேதரவால் ஆகியோர் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டனர். அவர்களையும் ஊர்காவல் படை வீரர் அன்பரசு பத்திரமாக மீட்டார்.
புதுச்சேரி கடற்கரையில் அடுத்தடுத்து 3 பேர் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது உயிரையும் பொருட்படுத்தாமல் 3 பேரின் உயிரை காப்பாற்றிய ஊர்க்காவல் படை வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
போலீஸ் பாதுகாப்பு
புதுச்சேரி கடலில் குளிக்க கூடாது என்று பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எச்சரிக்கையை மீறி சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குளித்து வருகின்றனர். இதனால் உயிர்பலி ஏற்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் 186 பேரின் உயிரை காவு வாங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே உயிர்பலி ஏற்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறைந்தபட்சம் தொடர் விடுமுறை மற்றும் வார இறுதிநாட்களிலாவது கடற்கரை பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.