ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
|குடோனில் பதுக்கிய ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம்
குடோனில் பதுக்கிய ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் ரோந்து
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பூமியான்பேட்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சாக்கு மூட்டையுடன் 2 பேர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மூட்டை, மூட்டையாக புகையிலை
இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், முத்தரையர்பாளையம் வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 48), லாஸ்பேட்டை சுப்ரமணி கோவில் தெருவை சேர்ந்த துளசிராமன் (42) என்பதும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதும் தெரியவந்தது.
வடமாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து பூமியான்பேட்டை பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து குடோனாக பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த குடோனில் போலீசார் சோதனை செய்தபோது மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
2 பேர் கைது
குடோனில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணன், துளசிராமன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அத்துடன் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம், 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.