புதுவை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 25-ந் தேதி விடுமுறை
|தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 25-ந் தேதி விடுமுறை என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 25-ந் தேதி விடுமுறை என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் இன்று சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.1,400 கோடி
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர், மத்திய உள்துறை துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோரை சந்தித்து, மாநில வளர்ச்சிக்காக கூடுதல் நிதியை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது அவர்கள், புதுவை மாநிலத்திற்கான பட்ஜெட் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் திருத்திய மதிப்பீட்டை பரிசீலனை செய்கிறோம் என உத்தரவாதம் அளித்தனர்.
அதன் அடிப்படையில் மத்திய அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுவை மாநில வளர்ச்சிக்கு ரூ.1,400 கோடி ஒதுக்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். இந்த நிதியை புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக பயன்படுத்த முதல்-அமைச்சர் உரிய திட்டங்களை வகுத்து பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்க நடவடிக்கை எடுப்பார்.
25-ந் தேதி விடுமுறை
புதுச்சேரி மாநில விளையாட்டு கழகம், ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளி ஆகியவை இணைந்து புதுச்சேரி மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி அரசின் விளையாட்டு துறைக்கு என தனித்துறையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படும். இதற்காக கோப்புகள் தயார் செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏனாம் பகுதியில் சட்ட விரோதமாக சூதாட்ட கிளப்புகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் தனி கல்வி வாரியம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் தனி கல்வி வாரியம் அமைத்தால் ஆண்டுதோறும் அதிக செலவு ஏற்படும். எனவே தனி கல்வி வாரியம் அமைக்கும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது.
துப்பாக்கி சூடு
புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் தற்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வரும் போது நமக்கு தனி கல்வி வாரியம் தேவையில்லை. மத்திய அரசின் கல்வி வாரியத்தை பின்பற்றினால் போதும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 25-ந் தேதி விடுமுறை அளிக்கப்படும்.
மின்துறை ஊழியர்கள் பிரச்சினை தொடர்பாக கவர்னர், முதல்-அமைச்சர் மட்டத்தில் ஆலோசனை நடத்தி வருகிறோம். தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்படும். மீனவர்களின் மீதான துப்பாக்கி சூடு சம்பந்தமாக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவோம். கடலோர கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
முன்னதாக அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பிப்டிக்கின் துணை நிறுவனமான பெலிக்கானும், பி.எஸ்.என்.எல். நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியின் அனைத்து பகுதிகளிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தொலைபேசி, இணையதளம், தொலைக்காட்சி ஆகிய சேவைகள் தொடங்கப்பட உள்ளது. புதுவையில் தடையற்ற இளையதள சேவையை அதிக வேகத்துடன் வழங்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பிப்டிக் செயலர் சத்திய மூர்த்தி, பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் திலகவதி ஆகியோர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.