மேல்நிலை எழுத்தர்கள் 218 பேர் தற்செயல் விடுப்பு
|புதுச்சேரி
உதவியாளர் பதவி உயர்வு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை எழுத்தர்கள் 218 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்தனர். 26-ந்தேதி போராட்டம் நடத்துகிறார்கள்.
போட்டித்தேர்வு
புதுவை அரசுத்துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஊழியர்களுக்கு இடையேயான போட்டித்தேர்வு வருகிற ஜூலை 16-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டித்தேர்வுக்கு மேல்நிலை எழுத்தர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தேர்வுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பலமுறை வலியுறுத்திய நிலையில் அதிகாரிகள் போட்டித்தேர்வு நடத்துவதில் உறுதியாக உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.
தற்செயல் விடுப்பு
அதன்படி மேல்நிலை எழுத்தர்கள் 218 பேர் இன்று பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்தனர். அவர்கள் பாரதி பூங்காவில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது நாளையும் (வியாழக்கிழமை), நாளை மறுதினமும் (வெள்ளிக்கிழமை) தங்களது போராட்டம் தொடர்பாக அரசு அலுவலகங்களுக்கு சென்று பிற ஊழியர்களுக்கு தெரிவித்து ஆதரவு திரட்டுவது என்றும் வருகிற 26-ந்தேதி மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்துள்ளனர். இதனால், பணியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற சூழ்நிலை உள்ளது.
நிச்சயம் நடவடிக்கை
மேல்நிலை எழுத்தர்கள் போராட்டம் குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,''மேல்நிலை எழுத்தர்களுக்கு போட்டித்தேர்வு நடத்தப்பட்டு தகுதி அடிப்படையில் உதவியாளர்ன் பணியிடம் நிரப்ப அரசால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதுநிலை எழுத்தர்கள் இன்று சிலர் தற்செயல் விடுப்பு எடுத்துள்ளனர். ஆனால், முறைப்படி நோட்டீஸ் கொடுத்து அவர்கள் விடுப்பு எடுக்கவில்லை. இந்த காரணத்திற்காகத்தான் விடுமுறை எடுத்துள்ளோம் என நோட்டீஸ் கொடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது, அரசுடன் கலந்தாலோசனை செய்து நிச்சயம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றனர்.