
வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட்' செய்த பொதுமக்கள்

புதுவையில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அவற்றை பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்ய தொடங்கினர்.
புதுச்சேரி
2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அவற்றை பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்ய தொடங்கினர்.
2,000 ரூபாய் நோட்டுகள்
2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19-ந்தேதி அறிவித்தது. அந்த நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.
குறிப்பாக நாளொன்றுக்கு தனிநபர் ரூ.20 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் டெபாசிட் செய்வதற்கு 'பான்' எண்ணை குறிப்பிட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்திருந்தார்.
ஆவணம் தேவையில்லை
அதேநேரத்தில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.2,000 நோட்டுகளை மாற்ற எந்தவித ஆவணமும் தரவேண்டியதில்லை என்று அறிவித்திருந்தது. அதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், அது இன்னும் விசாரணைக்கு வரவில்லை.
இந்தநிலையில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, வங்கியில் ரூ.2,000 நோட்டை மாற்றுவது இன்று முதல் அமலுக்கு வந்தது. பொதுமக்களில் சிலர் தங்களது வீட்டில் இருந்த ஒருசில ரூ.2,000 நோட்டுகளை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்றனர்.
பெரும்பாலான வங்கிகளில் அந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள். பணத்தை டெபாசிட் செய்துவிட்டு அதன்பின் தேவையான பணத்தை செலானில் நிரப்பி பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதே நேரத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் ஏற்கனவே அறிவித்தபடி பொதுமக்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பில் ரூ.2,000 நோட்டுகளை எந்தவித ஆவணமும் இல்லாமல் பெற்றுக்கொண்டு அதற்கு சமமாக ரூ.500, ரூ.200, ரூ.100 என நோட்டுகளை வழங்கினார்கள். இதனால், மற்ற வங்கிகளை விட பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் பணத்தை மாற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
வாக்குவாதம்
ரூ.2,000 நோட்டை வங்கியில் டெபாசிட் செய்யுமாறு கூறிய வங்கி ஊழியர்களிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் வங்கி ஊழியர்கள் அதை ஏற்க மறுக்கவே, அவர்கள் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு சென்றனர். புதுவை மாநிலத்தை பொறுத்தவரை ரூ.2,000 நோட்டுகள் என்பது பெருமளவு புழக்கத்தில் இல்லாமலேயே இருந்து வந்தது. இதனால் ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் அதிக அளவில் வராததால் வங்கிகளில் வழக்கம்போலவே கூட்டம் இருந்தது.
கடந்த 2016-ம் ஆண்டு நம்பர் மாதம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தபோது வங்கிகளிலும் ஏ.டி.எம். மையங்களிலும் வாடிகையாளர்கள் மிக நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்துகிடந்து சிரமப்பட்டு பணத்தை மாற்றி சென்றனர். ஆனால், தற்போது ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதில் பெரிய அளவில் சிரமம் ஏதும் இல்லை என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.