போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
|வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே திருக்காஞ்சிபேட் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (வயது 25). இவர் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு 8 மணியளவில் வில்லியனூர் பைபாஸ் சாலை எம்.ஜி.ஆர். சிலை அருகே ஏட்டு மோகன், போலீஸ்காரர் பிரதாப் ஆகியோருடன் ஜெயகிருஷ்ணன் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது பைபாஸ் சாலையில் புதுவை நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். அதில் வந்த 2 வாலிபர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது புதுச்சேரி கோவிந்தசாலையை சேர்ந்த பிரகாஷ் (30), லாஸ்பேட்டை மணி என்கிற மணிகண்டன் (23) என்பது தெரியவந்தது.
போலீஸ்காரர் மீது தாக்குதல்
இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் சாவியை வாங்கியுள்ளனர். உடனே அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கு விட்டு விட்டு நடந்து சென்றனர். இந்த நிலையில் போலீஸ்காரர்கள் மோகன், பிரதாப் ஆகியோர் அங்கிருந்து போலீஸ் நிலையம் சென்றுவிட்டனர். ஜெயகிருஷ்ணன் மட்டும் அங்கு தனியாக நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பிரகாஷ், மணி ஆகியோர் போலீஸ்காரர் ஜெயகிருஷ்ணனிடம் மோட்டார் சைக்கிள் சாவியை கேட்டு தகராறு செய்து, தாக்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து வில்லியனூர் போலீசில் ஒப்படைத்தனர்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து மணி, பிரகாஷ் ஆகியோர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.