2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு
|குழப்பத்திற்கு மத்தியில் சென்டாக் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் இடம் கிடைத்த மாணவர்கள் வருகிற 11-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டது.
புதுச்சேரி
குழப்பத்திற்கு மத்தியில் சென்டாக் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் இடம் கிடைத்த மாணவர்கள் வருகிற 11-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டது.
திரும்பப்பெறப்பட்டது
புதுவையில் உள்ள அரசு தனியார் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதா, கால்நடை மருத்துவ கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக இடஒதுக்கீட்டில் சேருவதற்கான சென்டாக் முதல்கட்ட கலந்தாய்வு முடிந்து 2-ம் கட்ட கலந்தாய்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி இரவு 2-ம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் அதில் குளறுபடிகள் ஏற்பட்டதால் உடனடியாக அந்த முடிவுகள் திரும்பப்பெறப்பட்டன. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டதாக சென்டாக் தெரிவித்துள்ளது.
2-ம் கடந்த கலந்தாய்வு
இந்தநிலையில் இன்று மீண்டும் 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் இடம் கிடைத்த மாணவர்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10 மணிமுதல் தங்களுக்கான இடஒதுக்கீட்டு ஆணையை சென்டாக் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இடம் கிடைத்த மாணவர்கள் வருகிற 11-ந்தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேரவேண்டும். புதுவை பிராந்தியத்தில் இருந்து வெளியில் உள்ள மாணவர்கள் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ தங்களது சேர்க்கையை உறுதி செய்யவேண்டும்.
மேற்கண்ட தகவலை சென்டாக் தெரிவித்துள்ளது.